திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க திட்டம்

திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க திட்டம்
X
திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் என்.ரகுராமன், துணைத்தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நகர வளர்ச்சிக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விவாதம் நடந்தது.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் பேசுகையில், 'நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை பொறுத்து கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவத்திபுரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ரூ.40 கோடி அரசிடம் முன்வைக்கப்பட்டு உள்ளது. கல்வி நிதியை பொறுத்தவரை பள்ளிகளுக்கு மட்டுமே செயல்படுத்த இயலும். எனவே பள்ளிகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறினால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கால்வாய் கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து கழிவுநீரை வெளியேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்றார்.

மேலும் கூட்டத்தின் போது உறுப்பினர்கள் பேசும்போது, பேருந்து நிலைய பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணிகள் நிழல் குடையை சீரமைக்க வேண்டும். பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாற்றில் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

நகராட்சி பகுதியில் முறைப்படுத்தப்படாத 1500 குடிநீர் இணைப்புகள் உள்ளன, அவைகளில் 250 இணைப்புகள் மட்டுமே தற்போது முறைப் படுத்தப் பட்டுள்ளன. குடிநீர் குழாய்கள் மற்றும் இதர வரிகளை பொதுமக்கள் செலுத்திட உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஒப்பந்தக்குழு, வரி சீராய்வு கமிட்டி உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நகரமன்ற தலைவர் மோகனவேல் சால்வை அணிவித்தார்.

Tags

Next Story
the future with ai