செய்யாறு வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினர் மீட்பு
ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த தம்பதியை மீட்டு வரும் தீயணைப்பு படை வீரர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் வயது 74. இவரது மனைவி கற்பகம் வயது 65.
இவர்களுக்கு சிவராமன், சீனு என்ற மகன்களும், சிவகாமி, சித்ரா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மகள் சிவகாமி சில ஆண்டுகளாக தனது பெற்றோருடன் தங்கி அவருடன் செங்கல் சூளையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று காலை செங்கல் சூளையில் வேலை செய்த போது சிவகாமிக்கும் அவர்கள் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் வேதனை அடைந்த சிவகாமி அங்கிருந்து மாயமானதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர் மகள் சிவகாமியை தேடி கண்டுபிடித்து இரவு வீட்டுக்கு அழைத்து வந்தனர். நள்ளிரவில் பார்த்த போது மீண்டும் அவர் காணவில்லை. இதனால்அவர்கள் மீண்டும் பல்வேறு இடங்களில் தேடினர். செய்யாறு ஆற்றங்கரை அருகிலுள்ள அங்காளம்மன் கோயிலுக்கு மகள் சென்று இருக்கலாம் என கருதி ஜெயச்சந்திரன் அவரது மனைவி கற்பகம் இருவரும் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் செய்யாற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றை ஒட்டிய திருவத்தூர் சுடுகாடு அருகே இறங்கி நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென்று ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததாகவும் ஆற்றின் மற்றொரு கரையில் நின்றிருந்த பொதுமக்கள் ஆற்றில் வெள்ளம் வருவதால் இங்கு வரவேண்டாம். திரும்பி செல்லுங்கள் என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம் அவர்களின் வந்த வழியே திரும்பி செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து நடுவில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தனா்.
இதைக் கண்ட பொதுமக்கள் செய்யாறு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஜெயச்சந்திரன், கற்பகத்தை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் . தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu