செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரதசப்தமி தேரோட்டம்
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரதசப்தமி தேரோட்டம்.
செய்யாறு டவுன் திருவோத்தூரில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையடுத்து 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் மேற்கொண்டதால் பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ரதசப்தமி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனம் என கற்பக விருட்ச காமதேனு வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், பெரய நாக வாகனம், அதிகார நந்தி வாகனம், பெரிய ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் காட்சியளித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நேற்று முன்தினம் சந்திரசேகரருக்கு அபிஷேகம், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாணம், அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண யானை வாகன சேவை நடந்தது.
பிரம்மோற்சவத்தின் 7- ஆம் நாள் விழா முக்கிய நிகழ்வான ரதசப்தமி மகாதேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து விநாயகா், வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி தோகளில் எழுந்தருளினா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடக்கிவைக்கப்பட்டது.
தேரோட்ட தொடக்க நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், மாவட்ட அறங்காவலா்கள் குழு உறுப்பினா் பாண்டுரங்கன், கோயில் செயல் அலுவலா் ஹரிஹரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை, விநாயகர் ஆகிய தேர்களை திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு, குமரன் தெரு வழியாக சென்று கோவிலை அடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்றதால் செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி காலை நடராஜர் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கொடி இறக்கமும், ராமேஸ்வர திருக்கைலாய சேவை, பஞ்சமூர்த்திகள் புறப்படும் நடைபெறுகிறது.
ஆரணி, செங்கத்தில் பெருமாள் கோவில்களில் ரத சப்தமி விழா நடைபெற்றது
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சாமியை சூரிய பிரபை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், கற்பக விருட்சக வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகிய 7 வாகனங்களில் காலை முதல் இரவு வரை சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செங்கம் செங்கம் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் ரத சப்தமி விழா நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu