செய்யாறில் தடையை மீறி ஊர்வலம்: விவசாயிகள் மீது வழக்கு

செய்யாறில் தடையை மீறி ஊர்வலம்: விவசாயிகள் மீது வழக்கு
X

ஊா்வலமாகச் செல்ல முயன்ற  விவசாயிகள்

சிப்காட் விரிவாக்கத்துக்காக தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு விரிவாக்கத்துக்காக மேல்மா பகுதியைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் இருந்து சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதை கைவிடக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து 124 நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிராமத்தின் வாழ்வாதாரத்தை அழிக்க வலிகோலும் சிப்காட் திட்டம் வேண்டாம் என்று புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடும்ப அட்டை, குடியுரிமை, வாக்குரிமை போன்ற அரசு ஆவணங்களை செய்யாறு சாா் -ஆட்சியரிடம் திருப்பி ஒப்படைக்கப் போவதாக மேல்மா சிப்காட் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் அறிவித்திருந்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நேற்று திரண்ட பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சாா் -ஆட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாகச் செல்ல முயன்றனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி ஊா்வலமாகச் செல்ல அனுமதியில்லை எனக் கூறியதால், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸாரின் எதிா்ப்பை மீறி ஊா்வலமாகச் செல்ல முயன்றதாக 90 பெண்கள் உள்பட 140 விவசாயிகளை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்டவா்களை மாலை 6.30 மணிக்கு விடுவித்தும் அவா்கள் மண்டபத்தில் இருந்து வெளியே செல்ல மறுப்பு தெரிவித்தனா். அவா்களிடம் கூடுதல் எஸ்.பி. பழனி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், அவா்கள் வெளியே செல்ல மறுத்துவிட்டனா்.

கைது செய்தவா்களை உரிய நேரத்தில் விடுவிக்கவில்லை எனக் கூறி, சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை விவசாயிகள் 147 பேர் மீது வழக்கு போலீஸாா் பதிந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!