செய்யாறில் தனியார் நிதி நிறுவனம் மோசடி: போலீசில் பொதுமக்கள் புகார்
பைல் படம்.
செய்யாறில் ரூ.25 கோடி வசூல் செய்து தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
செய்யாறில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு சிட்பண்டு என்ற பெயரில் கவர்ச்சிகரமான பொருட்கள் வழங்குவதாகக் கூறி பலர், ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர்.
இதற்காக செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கிளைகள் ஆரம்பித்து ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலித்து வருகின்றனர்.
இவ்வாறு பணம் வசூலித்த சில உரிமையாளர்கள் அதனை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஏராளமானோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்யாறில் புதிய காஞ்சீபுரம் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குலுக்கல் சீட்டு கட்டியுள்ளார்.
ஆனால் பணத்தை அதன் உரிமையாளர்களான செய்யாறு திருவத்தூர் சீனிவாசன் (வயது 38), செய்யாறு வாணியர் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (35) ஆகியோர் திருப்பி தராமல் தலைமறைவாகி உள்ளனர். இதுகுறித்து அனக்காவூர் பகுதியைச் சேர்ந்த அருள்தேவன் கொடுத்த மோசடி புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
இந்த நிதி நிறுவனத்தினர் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களாக செயல்பட்டவர்கள் பொதுமக்களிடமிருந்து வசூலித்த பணம் ரூ.25 கோடியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களும், முகவர்களும் நாள்தோறும் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் தனியார் நிதி நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu