விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம்; அமைச்சர் பேச்சு
![விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம்; அமைச்சர் பேச்சு விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம்; அமைச்சர் பேச்சு](https://www.nativenews.in/h-upload/2024/06/19/1916690-ad55f4f8-8245-4ea5-b260-6db7a80ce36d.webp)
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மத்திய இணை அமைச்சர்
விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், 3 கோடி விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது கவுரவ நிதி வழங்கும் திட்டத்தை காணொளி மூலமாக வாரணாசியில் இருந்து நாடு முழுவதும் பிரதமர் மோடி நேற்று மாலை (ஜுன் 18) தொடங்கி வைத்தார்.
இதையொட்டி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். மேலும் அவர், 20 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார்.
முதன் முதலில் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை தொடங்கிவைத்தாா். விவசாய பணிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
விவசாயத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் சன்மான நிதியாக 9.28 லட்சம் பேருக்கு 17-வது தவணையாக தலா ரூ.2 ஆயிரம், வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி இன்று வழங்கி உள்ளார். விவசாயிகளுக்கு சன்மான நிதியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். விவசாய இடுபொருள் வாங்க, பிரதமரின் சன்மான நிதி உதவுகிறது.
3 கோடி விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம். இதற்காக 3 கோடி தாய்மார்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கவும், விவசாய பொருட்களை எடுத்து செல்லவும், உரம் தெளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய பயிறு வகைகள், சிறு தானியங்களின் சாகுபடிகளை ஊக்குவித்து, அவற்றை சேமித்து வைப்பதற்கும், மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து விற்பனை செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
தொடர்ந்து வேளாண் அறிவியல் மையம் மூலம் 20 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களை அமைச்சா் எல்.முருகன் வழங்கினாா்.
முன்னதாக விவசாய உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, வேளாண் இணை இயக்குநா் ஹரக்குமாா், மாவட்ட விவசாயம் மற்றும் ஊரக வளா்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபாா்டு) மேலாளா், விஜய் நீஹா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சரண்யா தேவி, பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் ஏழுமலை, மற்றும் வேளாண்மை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu