35 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்நீர் அழுத்த பரிசோதனை செய்வது அவசியம்: மருத்துவர் தகவல்
உலக கண்நீர் அழுத்த உயர்வு நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம்
வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கண்நீர் அழுத்த உயர்வு நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு டாக்டர் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: பி.பி.என்று சர்வ சாதாரணமாக அனைவராலும் சுருக்கமாக அழைக்கப்படும் ரத்த அழுத்தம் நம் உடலில் பராமரிக்கப்படுவது தெரிந்ததுதான். 120/80 மி.மீ பாதரச அழுத்தத்தை விட இந்த அழுத்தம் உயர்ந்தால் அதனை உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். இதே போல் நம் கண்ணின் இயல்பான அழுத்தம் 10 - 20 மி.மீ பாதரச அழுத்தத்துக்குள் இருக்க வேண்டும். இதைவிட உயர்ந்தால் அதனை கண்நீர் அழுத்த உயர்வு என்கிறோம்.
நம் உடலில் பி.பி. அதிகமாக உயரும்போது எப்படி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறதோ அது போல் கண்நீர் அழுத்தம் உயரும்போதும் பிரச்னைகள் ஏற்படும். நம் கண்ணில் உள்ள முன் கண்ரசம் உற்பத்தியாவதில் உள்ள பிரச்சினை அல்லது அதன் சுழற்சி பாதையில் ஏற்படும் தடை காரணமாக அழுத்தம் அதிகரிக்கலாம். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் கண்களைப் பாதிப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்கு பலரும் செல்லும் நிலைமை இருக்கிறது.
வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் தொடக்க நிலையில் கண்டறிவது முக்கியம். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாமாக முன்வந்து மருத்துவமனைக்கு சென்று கண்நீர் அழுத்த சோதனை செய்துகொள்வது நல்லது. கண்நீர் அழுத்த உயர்வை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. சொட்டு மருந்து மூலமாகவோ, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இது நாள்பட்ட நீடித்த பிரச்சினை என்பதால் வாழ்நாள் முழுவதற்கும் கவனிப்பும் தொடர் சிகிச்சையும் தேவை.
ஒருமுறை பார்வை நரம்பு பாதித்து பார்வை பாதித்து விட்டால் இழந்த பார்வையை மீட்க முடியாது. மருத்துவ சிகிச்சை மூலம் கண்நீர் அழுத்த உயர்வினைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வைபாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியும்.அழுத்த உயர்வு ஏற்பட்ட பிறகு அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு பார்வை பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நல்ல மருந்துகளும் லேசர் சிகிச்சை முறைகளும் இருக்கிறது. ஒருவேளை கண்நீர் அழுத்தம் பின்னாளில் உயர்வதற்கான வாய்ப்பு அறிகுறிகள் இருந்தால் கூட எளிய லேசர் மருத்துவம் செய்து பார்வையை பாதுகாக்கும் அளவுக்கு மருத்துவம் இன்று வளர்ச்சி பெற்றுள்ளது என்றார் அவர். முடிவில் சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu