செய்யாறு அருகே பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு
கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிலை
செய்யாற்றை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை புடைப்பு சிற்பம் ஒன்றை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தொல்லியல் ஆா்வலரும், வரலாற்று ஆய்வாளருமான எறும்பூா் கை.செல்வகுமாா் கள ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆலத்தூா் கிராமம் உள்ளது. இந்த ஊரில் சிவன் பெருமாள், திரௌபதி அம்மன் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அருகே கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொற்றவை புடைப்புச் சிற்பம் சங்க கால ஐந்திணைகளின் ஒன்றான பாலை நில கடவுள் ஆகவும், மூவேந்தர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடுகள் இருந்துள்ளன.
பல்லவர் காலத்தில் வேட்டையாடும் தொழிலை கொண்டிருந்த மக்கள் வேட்டைக்கு புறப்படும் முன் கொற்றவை சிலையை வழிபட்டு சென்றுள்ளனர். மேலும் தமிழ் மரபில் கொற்றவை முதன்மை தெய்வமாக இருந்துள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம் அழகிய முகத்துடன் ஒன்பது கரங்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் எட்டு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களுடன், இடக்கையை இடுப்பில் வைத்தவாறு அபயம் முத்திரையுடன் எருமையின் தலை மேல் நின்று கொண்டிருக்கும் அமைப்பில் இச்சிலை காணப்படுகிறது.
சிலையானது தரை மட்டத்திலிருந்து 81 செ.மீட்டா் உயரமும், 55 செ.மீட்டா் அகலம் உடையதாகவும் உள்ளது. செய்யாறு பகுதிகளான குன்னத்தூா், செங்காடு, செய்யாற்றைவென்றான், பழஞ்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொற்றவை சிலைகள் காணப்பட்டாலும், அவைகளில் இருந்து ஆலத்தூரில் உள்ள கொற்றவை புடைப்புச் சிற்பம் தனித்துவமாக பாா்க்க முடிகிறது. கி.பி 9 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்தை சேர்ந்தவையாக கருத முடிகிறது. இந்த புடைப்பு சிற்பத்தை சிதையா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பது ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது என எறும்பூா் கை.செல்வகுமாா் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu