அதிக வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு 'சீல்'
வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஆருத்ரா கோல் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது
ஆரணி அடுத்த சேவூரில் மக்களுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி புதியதாக துவக்கப்பட்ட ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர் இந்த சோதனை பற்றி டி.எஸ்.பி. பழனி கூறுகையில்
எந்தவித அனுமதியும் இல்லாமல் பொதுமக்களிடமிருந்து முதலீடு பெற்றது தவறு ,எனவே இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது 108 நபர்களிடமிருந்து முதலீடு பெற்றுள்ளதாகவும் அதன் தொகை ரூ. 1.10. கோடி எனவும் தெரிய வருகிறது. மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்தக் கிளை நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆவணங்கள், புத்தகங்கள், வரவு செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் செல்கிறோம். மேலும் வருவாய்த்துறை மூலம் இந்த கிளைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்களை கைது கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்பு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.. அலுவலகத்தின் முகப்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணம் கட்டப்பட்டு மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என செல்போன் நம்பரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.
இதே போல வந்தவாசியில் ஆருத்ரா கோல்டு நிறுவன அதிகாரி ஒருவரின் உறவினரான மணிகண்டன் மற்றும் விளாங்காடு பகுதியை சேர்ந்த ஊழியர் விஜயகுமார் வீடுகளுக்கு நேற்று காலையில் சென்னை டி.ஜி.பி. உத்தரவின்படி கொடுங்காலூர் போலீசார் முன்னிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மணிகண்டன் வீட்டிலிருந்து 39 பவுன் மதிப்புள்ள 312 கிராம் தங்கமும், 650 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.24 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்யாறு நகரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும், அங்கிலிருந்த வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் அலுவலகத்தை பூட்டி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதேபோல ராணிப்பேட்டை, காட்பாடி பகுதிகளிலும் உள்ள நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu