தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு நோட்டீஸ்
பைல் படம்
செய்யாறு தாலுகா இளநீர் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் திலகவதி. கணவர் இறந்த நிலையில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார்.
திலகவதியின் தந்தை 1971-ம் ஆண்டு இறந்துள்ளதால் அப்போது இறப்பு குறித்து பதிவு செய்யப்படவில்லை. அதனைத்தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்க கோரியபோது சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
தாசில்தார் அலுவலகத்திற்கும் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து திரிந்த திலகவதி தாலுகா அலுவலகத்தில் தனது மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தன்னிடம் இருந்த தாலி மற்றும் கம்மல் ஆகியவை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்யாறு தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோருடன் சப்- கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தினார்.
பின்னர் தலைமை இடத்து துணை தாசில்தார் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா உத்தரவிட்டார். மேலும் திலகவதியிடம் அவரது தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவின் பணியிடை நீக்க உத்தரவினை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் ரத்து செய்துள்ளார்.
மேலும் தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசனின் பணியிடை நீக்க உத்தரவு தொடர்பாக செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிற்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெங்கடேசன் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையின்படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2 ஆண்டு தாசில்தார் பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். அவரது பணியில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறிந்து இருப்பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரை கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
மேலும் கலெக்டர் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பாமல் தன்னிச்சையாக அவரை பணியிடை நீக்கம் செய்தது குறித்தும், இறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செய்யாறு தாலுக்கா வருவாய்த் துறையினர் செய்யாறு துணை கலெக்டர் ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu