புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் தொடக்கம்
புதிய மாவட்டக் கல்வி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜோதி மற்றும் அதிகாரிகள்.
திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த தொடக்கக் கல்விக்கான மாவட்டக் கல்வி அலுவலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மற்றொரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் செய்யாற்றில் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்தது.
செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, தெள்ளார், பெரணமல்லூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட ஒன்பது யூனியன் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி 64 உள்பட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 850 பள்ளிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.
அதன்படி, அக்டோபா் 1 முதல் புதிதாக செயல்படத் தொடங்கியுள்ள செய்யாறு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் நளினி வரவேற்றாா்.
வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஓ.ஜோதி பங்கேற்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி.ராஜூ (வெம்பாக்கம்), என்.வி.பாபு (செய்யாறு), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu