தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கைது

தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கைது
X

ஏ பி ஆர் நிறுவன உரிமையாளர் அல்தாப்,

செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏபிஆர் நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிறுவனம் சாா்பில் தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை முன் வைத்து, கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முகவா்கள் மூலம் சிட்பண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் வேலூா், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை திட்டத்தில் இணைந்து பணம் செலுத்திய மக்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இதுதொடர்பாக, செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நிதி நிறுவன அலுவலகத்தை நேற்று முன்தினம் சூறையாடினர். மேலும் அலுவலகத்தில் இருந்த ஏசி, பீரோ உள்ளிட்ட ஓரிரு லட்சம் மட்டுமே மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றதாகவும் பொருட்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதேபோல், நிதி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் வீடும் சூறையாடப்பட்டது. மேலும், பணத்தை மீட்டுத் தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஏ பி ஆர் நிறுவன உரிமையாளர் அல்தாப்,தான் சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்ய சென்று இருப்பதாகவும் தலைமறைவாகவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வீடியோவில் மேலும் அவர் கூறியிருப்பதாவது,

எனது அலுவலகம் வீடு ஹோட்டல் பகுதிகளில் நுழைந்து அடித்து நொறுக்கி பொருட்களை தூக்கி சென்று விட்டனர். வீட்டிலிருந்த நகை பணத்தை காணவில்லை. நான் தலைமறைவாகிவிட்டேன் என்ற வதந்தியை நம்பி இப்படி செய்திருக்கின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் நிறைய உள்ளது தொழிலை ஒழுங்காக செய்ய முடியவில்லை, பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்களுக்கு சேர வேண்டிய. பொருட்களை வழங்க நான் தயாராக உள்ளேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தமேரி கொடுத்த புகாரில், “ஏபிஆர் நிதி நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை மோசடி செய்துள்ளது. நானும், எனது கிராமத்தில் வசிக்கும் ஜான்சி மேரி உள்ளிட்டவர்கள் ரூ.26.83 லட்சம் செலுத்தி உள்ளோம். முதிர்வு காலம் முடிந்த பிறகு பொருட்களை கொடுக்காமல் உரிமை யாளர் அல்தாப்தாசிப் மோசடி செய்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த உரிமையாளர் அல்தாப்தாசிப்பை ஆந்திர மாநிலம் சித்தூரில், செய்யாறு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்

மேலும் கிளை மேலாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார் கைது செய்து திருவண்ணாமலை விரைவு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பு ஆஜர்படுத்தினர் . கைது செய்யப்பட்ட இருவரையும் வேலூர் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!