திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மரம் விழுந்ததால் சேதம் அடைந்த கார்.
மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு ,வெம்பாக்கம் ,வந்தவாசி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மழையால் வட இலுப்பை , நெமிலி உள்ளிட்ட பல கிராமங்களில் 32 கூரை வீடுகள் உள்பட 55 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வீடுகள் சேதம் குறித்து கிராமப்புறங்களில் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை ,மின் துறை பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
பையூர் கிராமத்தில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன அரசு மகளிர் விடுதி அருகே மரம் வேரோடு சாய்ந்தது.
செய்யாறு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெம்பாக்கம் வட்டம் செய்யனுர் கிராமத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியிலும், பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த 50 பேர் அந்த பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ஆரம்பப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 பழங்குடி சமூகத்தை சேர்ந்த 50 பேருக்கு செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.
வந்தவாசி பகுதியில் செந்நாவரம் கிராமத்தில் அதிகாலை மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததில் ஒரு கடை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
வந்தவாசி பகுதியில் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. தாழ்வான பகுதியில் வசித்த 64 பேர் பள்ளி சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu