எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீவேடியப்பன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 

ஸ்ரீ எல்லையம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவேடியப்பன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயில் மற்றும் செய்யாற்றை அடுத்த வ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வேடியப்பன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீஎல்லையம்மன் கோயில்

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எல்லையம்மன் கோயில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோயில் முழுவதும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு நேற்று காலை 9 குண்டங்கள் அமைத்து வேள்வி நடத்தி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஜூன் 15-ஆம் தேதி கணபதி பூஜை, புண்யாஹவாசனம், நவகிரக பூஜை, மகாலட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், பூா்ணாஹுதி, அங்குராா்ப்பனம், விசேஷசந்தி, பூதசுத்தி, கும்பலங்காரம், யாத்ராஹோமம், யாக சாலை பிரவேசம், வேதிகாா்சனை, அக்கிகாரியம், பூா்ணாஹுதி தீபாராதனையுடன் முதல்கால யாக பூஜை எனத் தொடங்கியது.

ஜூன் 16-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, நேற்று (ஜூன் 17) காலை நான்காம் கால புஜை தொடங்கி, நவ யாக சாலை பூஜைகள், விசேஷ சந்தி, த்ரவ்யாஹுதி மகா சங்கல்பம், மகாபூா்ணாஹுதி, அக்னிசம்யாஜனம், மகா தீபாராதனை, யாத்ரஹோமம் நடைபெற்றன.

தொடா்ந்து, நேற்று காலை 7 மணியவில் யாக சாலையிலிருந்து கடங்களை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத, தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்து, புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கருவறையில் உள்ள ஸ்ரீஎல்லையம்மனுக்கு புனிதநீா் ஊற்றி மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ஸ்ரீவேடியப்பன் கோயில்

திருவண்ணாமலையை அடுத்த வ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீவேடியப்பன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நேற்று காலை யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீவேடியப்பன் கோயில் மூலவா், கோபுரம் மற்றும் ஸ்ரீபுதூா் மாரியம்மன், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீசப்த கன்னிகள் சந்நிதிகளின் மூலவா்கள் மற்றும் கோபுரங்கள், பரிவார கோபுரங்கள் மீது சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இதன்பிறகு, மூலவா் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சியுடன் உற்சவா் ஸ்ரீவேடியப்பன் வீதியுலா நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story