செய்யாறு அருகே கல்குவாரி லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
லாரியினை சிறைபிடித்த பொதுமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சிறுவேளியநல்லூர் கிராமத்தில் கல்குவாரி அமைந்துள்ளது. இங்கிருந்து அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி அதிக பாரங்களுடன் கருங்கற்களை இரவு பகல் பாராமல் லாரியில் ஏற்றுக்கொண்டு அதி வேகமாக செல்கின்றனர். அதி வேகமாக செல்லும் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும் கல்குவாரி அமைந்துள்ள புளியரம்பாக்கம் உள்பட கிராமப்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அந்த வழியாக கல் குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியினை கிராம பொதுமக்கள் மடக்கி சிறை பிடித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடித்த லாரியினை விடுவிக்காமல் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்குவாரி மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த சாலை வழியாக லாரிகள் வரக்கூடாது. குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை கூறினர்.
இதனை ஏற்றுக்கொண்ட கல்குவாரி மேற்பார்வையாளர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சரி செய்து தரப்படும் எனக் கூறினர். இதை எடுத்து கிராம மக்கள் லாரியினை விடுவித்தனர். இதனால் போக்குவரத்து சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu