கூல் ட்ரிங்ஸ் அருந்திய சிறுமி உயிர் இழப்பு எதிரொலி; அனைத்து குளிர்பான உற்பத்தி ஆலைகளில் ஆய்வு
திருவண்ணாமலை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கனிக்கிலுப்பை கிராமத்தில் நேற்று முன்தினம் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி காவ்யா ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குளிர்பானம் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும் குளிர்பானம் உற்பத்தி ஆலையிலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதியரின் ஆறு வயது மகள் கடந்த 12ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள கடையில் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி காவியா மயங்கி விழுந்துள்ளார் உடனே குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்
குளிர்பானத்தை குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பெற்றோர் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குளிர்பான மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாவதியான மற்றும் தரமற்ற குளிர்பானங்கள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாம் என அனைத்து அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆசிரியர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வுசெய்து தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தகவல்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது,
சிறுமி குடித்த குளிர்பானம், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 30 பாட்டில்கள் வாங்கிவந்து, சம்பந்தப்பட்ட கடைக்காரர் விற்பனை செய்துள்ளார். 29 குளிர்பான பாட்டில்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. மீதமிருந்த ஒரு குளிர்பான பாட்டிலை கைப்பற்றி, ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
குளிர்பான உற்பத்தி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. திருவண்ணாமலை சிறுமி குடித்த குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏலியம்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள மகேந்திரா சிட்டி வளாகத்தில் சிறுமி குடித்த குளிர்பானத்தின் கிளை குளிர்பான ஆலையில், நேற்று மாலை உணவு பாதுகாப்பு துறையின் திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலையில் உள்ள சுகாதாரம் குறித்தும், குளிர்பான உற்பத்தி தொடர்பாகவும், மூலப் பொருட்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும் சிறுமி குடித்த குளிர்பானத்தின் தயாரிப்பு பேட்ச் எண் கொண்ட குளிர்பானங்கள் ஏதேனும் இந்த ஆலையின் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி ரவீன், குளிர்பான ஆலையில் இருந்து மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த தொழிற்சாலையில் குளிர்பானத்தில் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் இங்குள்ள குளிர்பானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu