செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம்
விவசாயிகள் முகச்சவரம் செய்தும், தலைமுடிக்கு ‘டை’ அடித்தும், மேக்கப் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
பட்டா மாறுதல் முகாம் கடந்த 52 வாரங்களாக நடந்தது. அதில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உரிய ஒப்புதல் ரசீது தரப்படுவதில்லை. மனுக்களுக்கான தீர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் 52 முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள், தேர்வு செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யப்படாத மனுக்களின் விவரம், தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தும் உரிய பதில் இல்லை.
இந்த நிலையில் விவசாயிகள் முகச்சவரம் செய்தும், தலைமுடிக்கு 'டை' அடித்தும், மேக்கப் போட்டும் மனிதர்களுக்கு பாலீஷ் செய்வதுபோன்றும், பட்டா மாறுதல் முகாம்களை நடத்தி மனுக்களை பெற்று கடைசியில் முகத்தை கழுவினால் சாயம் வெளுத்தது போல் பதில் இல்லை, எனக்கூறி குற்றம்சாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வருவாய்த்துறையை கண்டித்து கண்டனக் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த மனுவை தாசில்தார் க.சுமதியிடம் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu