நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: திருவண்ணாமலை மாவட்ட முக்கிய நிகழ்வுகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள சந்தை மேட்டுப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ராஜு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட கவுன்சிலர் தெய்வமணி, ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், ஒருங்கிணைந்த வெம்பாக்கம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சீனிவாசன், சங்கர், மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரக நெல் ஒரு கிலோ ரூ.21.60-க்கும், குண்டு ரகம் நெல் ஒரு கிலோ ரூ.21.15-க்கும், 17 சதவீத ஈரப்பதத்துடன் கொள் முதல் செய்யப்படுகிறது. மேலும் நாள்தோறும் சராசரியாக 40 கிலோ எடை வீதம் 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கம் பேரூராட்சி கூட்டம்
செங்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக உயர் கோபுர மின்விளக்கு அமைத்தல், ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தோக்கவாடி பகுதியில் சமுதாய கழிப்பிடம் அமைத்தல் , ஆணைமங்கலம் பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் பழுது பார்த்தல், அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளான மின்விளக்கு, குடிநீர், கால்வாய் வசதிகள் உட்பட வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ,வார்டு கவுன்சிலர்கள் ,பேரூராட்சி மன்ற அலுவலக ஊழியர்கள், கலந்து கொண்டனர். தீர்மானங்களை பேரூராட்சி அலுவலர் ரமேஷ் வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை தாசில்தார் சரளா வரவேற்றார். இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எனவே, இந்த இடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டம் நடத்தாமல் வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு உதவி கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வேறு இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கூட்டத்தில் சுகாதார துறை, நெடுஞ்சாலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத் திறனாளிகள் கூட்டத்திற்கு அதிகாரிகள் முறையாக வருவதில்லை. கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு பல மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று அவர்கள் வெளியில் செல்ல புறப்பட்டனர்.
உடனே அவர்களிடம் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பின்னர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும் அவர்கள் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu