செய்யாற்றில் ரூ. 50 கோடிக்கும் மேல் வளா்ச்சிப் பணிகள் - அமைச்சா் வேலு
திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து பேசிய அமைச்சர் வேலு
செய்யாறு தொகுதியில் ரூ. 50 கோடிக்கு மேல் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அமைச்சா் எ.வ.வேலு கூறினார்.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி, அனக்காவூா் ஒன்றியம் ஞானமுருகன்பூண்டி அருகே, ஆரணி திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு இரவு பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். மத்திய அரசால் விலைவாசி உயர்வில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தியா கூட்டணி வெற்றி பெறவும் இந்திய நாட்டை காப்பாற்றுவதற்காக திமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
நமது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக ரூபாய் ஆயிரம் குடும்ப அட்டை மூலம் வழங்குவதற்கு கையெழுத்திட்டார்.
மேலும் மகளிர்க்கு நகரப் பேருந்தில் கட்டணம் இன்றி பயணிக்கவும், மகளிர் சுய உதவி கடன் ரத்து செய்யவும், காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தி பெண்களுக்கான ஆட்சியாக நமது முதல்வர் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொன்னாா் வீடு இல்லாதவா்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுக்கப்படும் என்று, ஆனால் தரவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி விதிப்பு, தங்கம் விலை உயா்வு, அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துவிட்டது.
மேலும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலை குறைப்பு என சொன்னாா்கள் செய்யவில்லை.
நிதி நெருக்கடியிலும் செய்யாறு தொகுதியில் ரூ. 50 கோடிக்கும் மேல் குடிநீா்த் திட்டப் பணி, பள்ளி வகுப்பறை கட்டடங்கள், சாலை வசதி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் வேலு பேசினார்.
முன்னதாக திமுகவின் சாதனை விளக்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர்கள், நகர செயலாளர், நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய செயலாளர், மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், அணி அமைப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu