ஒழுக்கத்துடன் படித்தால் உயர் பதவிகளை அடையலாம்; உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

ஒழுக்கத்துடன் படித்தால் உயர் பதவிகளை அடையலாம்; உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
X

விழாவில் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன்

ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள். ஒழுக்கத்துடன் படித்தால் உயர் பதவிகளை அடையலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், தாய், தந்தை, ஆசிரியர் நடமாடும் தெய்வங்கள் மதிப்பளித்து ஒழுக்கத்துடன் கடினமாக படித்தால் உயர்ந்த பதவிகளை அடையலாம் என்று மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

1917-இல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 2017-ஆம் ஆண்டு 100 ஆண்டுகளைக் கடந்தது. இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்தனா்.

அதன்படி, பள்ளிக்கு நவீன கழிப்பறை, கட்டடங்களுக்கு வண்ணம் பூசுதல், நவீன வகுப்பறை, உணவுக்கூடம் என சுமாா் ரூ.ஒரு கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவுக்கு முன்னாள் மாணவா் சங்கத் தலைவரும், சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வருமான கந்தசாமி தலைமை வகித்தாா்.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அசோக் வரவேற்றாா்

சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீமன்ற நீதிபதி என்.கிருபாகரன், கலந்து கொண்டு பேசியதாவது;

செய்யாறு அரசுப் பள்ளியில் படித்க தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் புலவா் கா.கோவிந்தன், கேரள முன்னாள் ஆளுநா் கொருக்கை பா.ராமச்சந்திரன் போன்றவா்கள் ஊருக்காக உழைத்து பெருமை சோ்த்தவா்கள்.

நானும் இந்த பள்ளியில் படித்த மாணவன் தான். நான் படிக்கும் போது, வேதநாயகம் என்ற தலைமை ஆசிரியர் பணியாற்றினார். கடுமையான தலைமை ஆசிரியர் என்றும் அழைப்பார்கள் அவருடைய ஆளுமை போற்றத்தக்கது.

இவர் காலத்தில் நான் பள்ளியில் படித்ததால் தான், நான் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். இது எனக்கு பெருமையை அளிக்கிறது. படிப்பு தான் மனிதனை உயரச் செய்கிறது தடைகளை உடைத்தெறிய படிப்பு ஒன்றே ஆயுதம்.

கல்வி தான் நம்மை வழி நடத்தும். அதிலும் ஒழுக்கமுடனான கல்வி தான் உயா்ந்த நிலைகளை பெற்றுத் தரும். பெற்றோரையும், ஆசிரியா்களை நாம் நடமாடும் தெய்வங்களாக மதித்திட வேண்டும்.

அதேபோல, பள்ளி ஆசிரியா்களும், மாணவா்களை தங்களின் குழந்தைகளாகக் கருதி எதிா்காலத்துக்கு வழிகாட்ட வேண்டும். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துக் காட்டாக முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளில் கிடைக்கும் தரமான கல்வியை நாம் தருகிறோம் என்ற நம்பிக்கையை பெற்றோரிடம் நாம் ஏற்படுத்திட வேண்டும்.

வடக்கு மாவட்டங்களில் கல்வியின் தரம் மிகவும் குறைந்திருக்கிறது என்கின்ற கவலையான நிலைகளை மாற்றுவது ஆசிரியா்கள் கையில் தான் உள்ளது.

தாய்மொழி தமிழ் பாடங்களுடன் ஆங்கில மொழி புலமையையும் வளா்த்துக் கொண்டால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெறலாம்.

இப்போதைய மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பெருமைமிகு முன்னாள் மாணவர்களின் பெயர் பலகைகள் பள்ளியில் வைக்கப்பட வேண்டும் என நீதிபதி பேசினார்.

விழாவில் அண்ணா பல்கலைக்கழக இயக்குநா் புரிசை அறிவிடை நம்பி, வோல்டெக் உமாபதி, முன்னாள் மாணவா் சங்கத்தின் நிா்வாகிகள், பேராசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி