திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்
மனுக்களை பெற்றுக்கொண்ட செய்யாறு சார் ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 576-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டாா்.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் ஆர்டிஓ மந்தாகினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் பரபரப்பு
ஆரணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிருடன் உள்ள நிலையில் அவருக்கு அவரது உறவினர்கள் சிலர் இறப்பு சான்றிதழ் வாங்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அச்சிறுவன் கடந்த மாதம் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால் இதுவரை இறப்பு சான்றிதழ் ரத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது
தன்னுடைய இறப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படாததால் அந்த சிறுவன் தனது உறவினர்கள் 2 பேருடன் குறைதீர்வு கூட்டத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைக் கண்டு சுதாரித்துக் கொண்டு அந்த சிறுவனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை உடலில் ஊற்றிக் கொள்வதற்கு முன்பே பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன் பெயரில் உள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஒப்படைக்க உள்ளேன் என்றார்.
பின்னர் அவரை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
செய்யாறு
செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 63 மனுக்கள் வரப்பெற்றன.
சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாா்-ஆட்சியா் அனாமிகா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா்.
சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 63 மனுக்களை அளித்தனா். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சாா் -ஆட்சியா் உத்தரவிட்டாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu