திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
X

 நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

செய்யாறு சார்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சார்-ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித்தொகை, பெயா் திருத்தம், பட்டா ரத்து, இலவச வீடு, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 58 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட சார் ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் சாணம் தெளித்து பெருக்கி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் என கோலமிட்டு, இலவச சேலையை விரித்து அதில் பட்ஜெட் விளக்கத்துக்கு ஏற்ப மூலதனச் செலவு, இலவசங்கள் மற்றும் அரசு ஊழியா் ஊதியம் ஆகியவற்றுக்கு ஏற்ப அரிசியை படியில் அளந்து, தமிழக அரசு ரூ.55 ஆயிரம் கோடிக்கு வட்டி கட்டும் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் தரமற்ற இலவசங்களால் 50 சதவீதம் வரை கமிஷனாகவும், கட்டுமானப் பணிகளில் 25 சதவீதம் வரை கமிஷனாக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.

இதனைத் தவிா்க்கவும், தரமற்ற இலவசங்களை தவிா்த்து நேரடியாக பணமாக கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கிராம சபைகளுக்கு கட்டுமானப் பணிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை சாா் -ஆட்சியா் அனாமிகாவிடம் விவசாயிகள் வழங்கினா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழங்கினா். இதில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பளவு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு நீா் செல்ல வழி ஏற்படுத்தித் தருதல், பத்திரப் பதிவு ரத்து, ஊரக வேலைத் திட்ட அட்டை, ஆவண சரிபாா்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 80 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியா் தனலட்சுமி, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பேட்டை, துரிஞ்சாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

போளூர் தாலுகா படவேடு ஊராட்சி பெருமாள் பேட்டை, துரிஞ்சாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில், படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த எங்களுக்கு கடந்த ஒரு வருடமாக 100 நாள் வேலை வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்