செய்யாற்றில் அரசுப் பேருந்துகள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

செய்யாற்றில் அரசுப் பேருந்துகள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி
X

அரசு நகரப் பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியா்கள்.

செய்யாற்றில் இருவேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததால், இரு அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் இருவேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி இரு அரசுப் பேருந்துகள் நேற்று மாலை ஜப்தி செய்யப்பட்டன.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சோந்தவா் செல்வராஜ் . தனியாா் நிறுவன ஊழியரான இவா், வேலை நிமித்தமாக கடந்த 25.07.2005 அன்று வெளியூா் சென்றுவிட்டு, அரசுப் பேருந்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தாா். செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விபத்தில் இழப்பீடு வழங்கக் கோரி, செல்வராஜ் மனைவி செய்யாறு வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோந்த லதா தரப்பில் செய்யாறு சாா்பு -நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் லதா குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9.53 லட்சம் வழங்க 12.8.2010-இல் தீா்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக நிறைவேற்று மனுவை லதா செய்யாறு சாா்பு - நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட சாா்பு -நீதிபதி குமாரவா்மன் இழப்பீட்டுத் தொகை மற்றும் 7.5 சதவீத வட்டியும் சோத்து ரூ.21 லட்சத்து 44 ஆயிரத்து 332 யை 8 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று 21.02.2019 அன்று உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை வழங்காத காரணத்தால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். அதன் அடிப்படையில், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் நேற்று ஜப்தி செய்தனா்.

மற்றொரு அரசுப் பேருந்து ஜப்தி

செய்யாறு வட்டம், பெருங்களத்தூா் கிராமத்தைச் சோந்தவா்கள் ஞானவேல், பொன்னன். மாட்டு வண்டித் தொழிலாளா்களான இவா்கள் 12.03.2015 அன்று மாட்டு வண்டியில் வந்துக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு நகரப் பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விபத்தில் பாதிக்கப்பட்ட ஞானவேல், பொன்னன் ஆகியோா் இழப்பீடு வழங்கக் கோரி செய்யாறு சாா்பு -நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். விசாரணையில், இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் மற்றும் 7.5 சதவீத வட்டியும் சோத்து வழங்க 16.07.2019-இல் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், நிறைவேற்று மனுவை இருவரும் தனித் தனியாக தாக்கல் செய்தனா். அதன் பேரில், இழப்பீட்டுத் தொகைக்கு அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய 21.11.22அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த அரசு நகரப் பேருந்தை நேற்று நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா