திருவண்ணாமலையில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி.
ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். பல்வேறு தேவாலயங்களில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது.
நேற்று புனிதவெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும்போதும், அதில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.
திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் நேற்று காலை சிலுவை பாதை வழிபாடு நடந்தது. பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி சென்று உலக மாதா ஆலயத்தில் 14 இடங்களில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்..
செங்கம் பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிராத்தனை மற்றும் கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் ஏசுநாதர் போல் வேடம் அணிந்த ஒருவரை சிலுவை சுமக்க வைத்து அடித்து இழுத்து வருவது போலவும் தொடர்ந்து அவர் சிலுவை சுமப்பது போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து அவரை சிலுவையில் அறைந்த பிறகு கல்லறையில் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தின் சார்பில் கிறிஸ்தவர்கள் நேற்று காலை புனித வெள்ளியை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயேசுவை சிலுவையில் அறைந்தது நினைவூட்டி சிலுவை சுமந்த படி ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி:
சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் நெடுங்குணம் மாதா மலைக்கு சிலுவை ஏந்தி பயணம் நடைபெற்றது, இதில் கிறிஸ்தவர்கள் சிலுவையைத் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
கீழ்பெண்ணாத்தூர்:
வேட்டவலம் மலையில் உள்ள புனித தேவாலயத்திற்கு சிலுவைப்பாதை எடுத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாளை ஈஸ்டர்:
ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu