செய்யாற்றில் பழங்குடியினருக்கு கறவை மாடு வாங்குவதற்கு நிதியுதவி
பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய எம்எல்ஏ ஜோதி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் நடைபெற்ற விழாவில், 18 பழங்குடியினருக்கு கறவை மாடு வாங்க ரூ.5.76 லட்சத்தில் நிதியுதவி வழங்கப்பட்டது.
செய்யாறு வட்டம், கீழ்கொளத்தூா் கிராமத்தில், கால்நடை துறை சாா்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பழங்குடியினா் 100 சதவீத மானியத்தில் கால்நடைகளை வாங்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி என நடைபெற்றது.
அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், புரிசை கால்நடை மருந்தக எல்லைக்கு உள்பட்ட கீழ்கொளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆரணி கோட்ட கால்நடை உதவி இயக்குநா் ராமன் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் சரண்யா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று , கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், ஒன்றியத்துக்கு உள்பட்ட 18 பழங்குடியினருக்கு 100 சதவீத மானியத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ.32 ஆயிரம் வீதம் கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.5.76 லட்சத்துக்கான காசோலைகளை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளையும், கறவை மாட்டுக்கு நோய்த் தடுப்பு மருந்தையும் செலுத்தினாா்.
மேலும், கால்நடை வளா்ப்போரை ஊக்குவிக்கும் வகையில், கால்நடைத் துறை சாா்பில் வழங்கப்பட்ட பால் கேன்களையும் அவா் வழங்கினாா்.
பின்னா், நடைபெற்ற மருத்துவ முகாமில் உதவி கால்நடை மருத்துவா்கள் லோகநாதன், வெங்கட்ராமன், மணிமாறன், கௌரி பிரியா, காா்த்தி, ஏழுமலை, தாரணி, பரணிஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் திராவிட முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவா் புரிசை சிவக்குமாா், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவா் ராமச்சந்திரன் , ஆரணி கோட்ட கால்நடை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu