விதை விற்பனை நிலையங்களில் விதிமீறலா? செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் பறக்கும்படை குழுவினர் ஆய்வு…
விதை விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வு செய்த பறக்கும் படையினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில விதை விற்பனை நிலையங்களில் விதிமுறை மீறல்கள் இருப்பதாக புகார் எழுந்தது. அவ்வாறு விதமுறை மீறல் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் அடங்கிய பறக்கும்படை அமைத்து திடீரென சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதைகள் விற்பனை செய்ய உரிமம் உள்ளதா? இருப்பு புத்தகம், விற்பனை புத்தகம், தகவல் பலகை போன்றவைகள் விதை சட்டம் 1966 மற்றும் விதைக்கட்டுப்பாடு ஆணை 1983-இன் படி கடைபிடிக்கின்றார்களா? என வேலூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு தலைமையிலான விதை ஆய்வாளர்கள் பறக்கும் படை அமைத்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சந்தேகிக்கும் வகையில் இருந்த 15 விதை மாதிரிகளை சேகரித்து முளைப்பு திறன் பரிசோதனை செய்யவும் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பயிர் பருவம் தெளிவாக குறிப்பிடாமலும், விதை பரிசோதனை முடிவுகள், பதிவுச்சான்று, வெளி மாநில விதைகளுக்கான படிவம்-2 ஆகிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 5,694 கிலோ எடையுள்ள 7 விதை குவியல்கள் கண்டறியப்பட்டது.
அந்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை செய்து பறக்கும் படையினர் உத்தரவிட்டனர். தொடர்ந்து விதை ஆய்வு துணை இயக்குநர் கூறுகையில், விவசாயிகள் விதை வாங்கும் முன் பயிர், ரகம், பருவம், காலாவதி நாள் மற்றும் வயது போன்ற அடிப்படை விபரம் நன்கு அறிந்து வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரைப்படியே விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu