செய்யாறு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு..!
பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அருகில் அமைந்துள்ள கிராமங்களான அத்தி, இளநீர்குன்றம், நர்மா பள்ளம், மேல்மா, தேத்துறை, குரும்பூர், வீரம்பாக்கம், வட ஆளப்பிறந்தான், நெடுங்கல் ஆகிய 9 ஊர்களில் சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தின் மூலம் நடைபெற்று வந்தன.
இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நடைபயணமாக சென்று, செய்யாறில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு (நிலம் எடுப்பு) தங்கள் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் நடைபயணம் செல்ல முயன்ற அவர்களை போலீசார் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
ஆனால் போலீசாரின் எதிர்ப்பை மீறி மேல்மா- எருமைவெட்டி சாலையில் 150 பெண்கள், 50 ஆண்கள் என 200 பேர் கறுப்புக் கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபபடி சென்றனர். அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆண்களில் சுமார் 30 பேரை போலீசார் வேனில் ஏற்றினர். அதனை பெண்கள் தடுத்தபோது பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த விவசாயிகள் இருவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட ஆண்கள் 30 பேரை விடுவிக்கக் கோரி பெண்கள் வேனின் இருபுறமும் தரையில் அமர்ந்தும் உருண்டு புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் கழித்து போலீஸ் வேனில் இருந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.
இருவர் காயம் அடைந்ததை அறிந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் மதியம் 3 மணியளவில் திடீரென காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மேல்மா கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பழனி , சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமரசம் ஏற்படவே மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu