அதிக எடையுடன் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள்

அதிக எடையுடன் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா பொக்கசமுத்திரம், நாட்டேரி, தென்னம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
இக்கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். சொர்ணவாரி பட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரையில் திறக்காத காரணத்தால், அறுவடை செய்த நெல்லினை விவசாயிகள் முகவர் மூலம் ஆரணியை சேர்ந்த நெல் வியாபாரி விநாயகமூர்த்தி நெல் கொள்முதல் செய்கிறார்.
அதேபோல், நேற்று வியாபாரி கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் எடைமெஷினில் நெல் மூட்டைகளை எடை போட்டு கொள்முதல் செய்தனர். இதில், 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல், கல் மண், குருணை பை எடை என கூடுதலாக 2 கிலோ சேர்த்து 77 கிலோ கணக்கிட்டு 3 விவசாயிகளிடம் 150 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது, அங்கு வந்த விவசாயிகள் லாரியில் ஏற்றிய ஒவ்வொரு நெல் மூட்டையும் பெரிதாக உள்ளதாக சந்தேகப்பட்டு விசாரித்தனர்.
அப்போது, வியாபாரி தரப்பில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த லாரி டிரைவர் சரத்குமார் , எடையாளர் ஜான் விவசாயிகள் முன்னிலையில் தான் 77 கிலோ எடை போடப்பட்டது என கூறி பதிலளித்துள்ளனர்.
நெல் மூட்டைகளை மீண்டும் எடை போட வேண்டும் என ஆரணி வியாபாரியிடம் வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, நெல் மூட்டைகளை எடை போட்டபோது, ஒரு மூட்டைக்கு 75 முதல் 80 கிலோ வரை இருக்க வேண்டிய நிலையில், 90 கிலோவுக்கு மேல் எடை இருந்ததால், விவசாயிகள் எடை போடும் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்தனா்
இதுகுறித்து விவசாயிகள் பிரம்மதேசம் போலீசார் மற்றும் வெம்பாக்கம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸ் எஸ்ஐக்கள் ஜெய்சங்கர், வெங்கடேசன், ஆர்ஐ உமாமகேஸ்வரி ஆகியோர் விசாரித்தனர்.
இதில், நெல் வியாபாரி விநாயகமூர்த்தி எடையில் தில்லுமுல்லு செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக ஏற்றப்பட்ட 2,640 நெல் மூட்டைகளுக்கும் கூடுதலாக பணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கூடுதல் எடை கொண்ட நெல்லுக்குண்டான உரிய விலையை கொடுப்பதாக நெல் வியாபாரி விநாயகமூர்த்தி உறுதி அளித்தார். அதன்பேரில், விவசாயிகள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu