செய்யாறு ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
செய்யாறு அருகே உள்ள மாமண்டூர் ஏரி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமண்டூர் பாசன ஏரி கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், விவசாயத் தொழிலை நம்பியுள்ள 55 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கி.பி. 6 -ம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமண்டூர் பாசன ஏரி இரண்டு குன்றுகளுக்கிடையே உருவாக்கப்பட்டுள்ளது.
வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள மாமண்டூர் ஏரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியாகும் இது. ஏரிக்கு நீர் வருவதற்கு வசதியாக ராஜாக் கால்வாய், வடஇலுப்பை கால்வாய், தண்டரை அணைக்கட்டு கால்வாய் என நீர்வரத்து கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து ராஜாக்கால்வாய் மூலமும், செய்யாறை அடுத்த வடஇலுப்பை கிராமப் பகுதி பாலாற்றுப் படுகையில் மதகு அமைக்கப்பட்டு ஐயங்கார்குளம், நமண்டி, அரிகரப்பாக்கம் வழியாகவும் வந்தடைகிறது.
மற்றொன்று தூசி தென்னம்பட்டு பிரதான கால்வாய் ஆற்காட்டை அடுத்த புதுப்பாடிப் பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் தொடங்கி பாலாறு அணைக்கட்டு, ராந்தம் ஏரி, தென்னம்பட்டு ஏரி, பெரூங்கட்டூர், வெம்பாக்கம், திருப்பனமூர், கீழ்நெல்லி, அரிகரப்பாக்கம் வழியாக மாமண்டூர் ஏரிக்கு நீர் வந்தடைகிறது.
அதேப்போல தண்டரை அணைக்கட்டுக் கால்வாய், செய்யாற்று படுகையில் தொடங்கி அருகாவூர், வடதண்டலம், தும்பை, பல்லி, சித்தாத்தூர் வழியாக மாமண்டூர் ஏரிக்கு நீர் வந்தடையும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த ஏரிக்கு சுமார் 492 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 30.2 அடி நீர்மட்ட உயரம் கொண்ட ஏரியில் நீர் தற்போது 28.6 அடி உயரத்தை எட்டியுள்ளது. தற்போது ஏரியில் 1560 மில்லியன் கன அடி நீர் தேங்கியுள்ளது. இன்னும் ஒரிரு நாள்களில் மாண்டூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும். மாமண்டூர் ஏரியில் ஒரு முறை முழு கொள்ளளவை எட்டினால் நான்கு போகம் நெற்பயிர் சாகுபடி செய்யலாம். குறைந்த பட்சம் எட்டு மாதங்களுக்காவது தண்ணீரை முழுமையாக பெற்று விவசாயம் செய்யலாம்.
மாமண்டூர் பாசன ஏரியால் 55க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால், செய்யாறு தொகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 215 ஏரிகளும், ஊரகவளர்ச்சித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 190 ஏரிகளும் என மொத்தம் 405 ஏரிகளில், சுமார் 40 சதவிகித ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதேப்போல் மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu