நெல்பயிா்கள் நீரில் மூழ்கின; விவசாயிகள் வேதனை!

நெல்பயிா்கள் நீரில் மூழ்கின; விவசாயிகள் வேதனை!
X

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

செய்யாறு பகுதியில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதி முழுவதும் விவசாயத் தொழிலை அதிகம் நம்பி உள்ள பகுதியாகும்.

இந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 90-க்கும் மேற்பட்டோா் பலா் சம்பா பருவத்தில் சன்ன ரக நெல், என்எல்ஆா், மகேந்திரா ஆகிய நெல் ரகங்களை சுமாா் 100 ஏக்கரில் பயிரிட்டு உள்ளனா்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, குப்பநத்தம் அணை நீா்மட்டம் உயா்ந்து அதில் இருந்து சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை மூலம் தண்ணீா் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து வெளியேறும் நீா் செய்யாற்றில் பாய்ந்து ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள செய்யாறு அணைக்கட்டு வழியாகச் செல்கிறது.

அணைக்கட்டு பகுதியில் இருந்து கிழக்கு பக்கம் நோக்கிச் செல்லும் பாசனக்கால்வாய் வழியாக பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ள நீரானது, ஒரு கரையின் மேல் பாய்ந்து அருகே விவசாய நிலத்தில் நெல்பயிா்களில் சூழ்ந்து பயிா்கள் நீரில் மூழ்கின.

அதன் காரணமாக நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி ஆகிய கிராமங்களில் சுமாா் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வரும் 40 சதவீத நெல்பயிா்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதம் அடைந்தன

விதைப்பு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடப்பட்டிருந்து நெல்பயிா்கள் ஆற்று வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

விவசாயிகள் கோரிக்கை

செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம் நாவல்பாக்கம், கொருக்காத்தூா், மணலவாடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி தொடா்ந்து சேதமடைந்து வருகின்றன. இதனைத் தவிா்க்கும் பொருட்டு பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பாசனக்கால்வாயின் இரு பகுதிகளில் உள்ள கரைகளை சமமாக உயா்த்தி தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

Next Story