லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

கைது செய்யப்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் வீட்டு மனை மீது செல்லும் மின்சார கம்பியை அகற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான வீட்டு மனையில் மாடி வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் மாடி மேல் மின்சார கம்பி செல்வதால் வீடு கட்ட முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் மின்சார கம்பியை அகற்றுவதற்கு வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று புகார் செய்துள்ளார்.
அப்போது உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் இடையூறாக இருக்கும் மின்வயரை அகற்றுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சக்திவேல் 50,000 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டவர், மின்சார கம்பியை அகற்றிட நடவடிக்கை எடுக்காமல், சக்திவேலை அலைகழிக்க செய்துள்ளார்.
பின்னர், திட்ட மதிப்பீடு தொகையான ரூ.39 ஆயிரத்துக்கு, கண்காணப்பு பொறியாளர் பெயரில் வங்கி வரைவோலை பெற்று வருமாறு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் கொடுத்து உள்ளதை நினைவுப்படுத்தியதும், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.39 ஆயிரத்தை கொண்டு வந்து சக்திவேலிடம் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் கடந்த 17ம் தேதி கொடுத்துள்ளார்.
மறுநாள் (18ம் தேதி), ரூ.39 ஆயிரத்துக்கு வங்கி வரையோலை எடுத்து வந்து மின்வாரிய அலுவலகத்தில் சக்திவேல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டு மனை முன்பு கடந்த 24ம் தேதி, 2 மின் கம்பங்கள் இறக்கி வைத்துவிட்டு, மேலும் ரூ.2 ஆயிரம் கொடுக்குமாறு உதவி மின் பொறியாளர் வலியுறுத்தி உள்ளார். அப்போது, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தில், ரூ.39 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுக்கப்பட்ட பிறகு, மீதம் ரூ.11 ஆயிரம் உள்ளது என சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரூ.11 ஆயிரத்தை நானும், மற்றொரு அதிகாரியும் எடுத்து கொண்டோம், தற்போது ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான், அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் சக்திவேல் புகார் கொடுத்துள்ளார்.
அவர்களது அறிவுரையின் பேரில், நேற்று தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் ரூ.2 ஆயிரத்தை சக்திவேல் கொடுத்துள்ளார். அவரும் பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல் முருகன் தலைமையிலான காவல் துறையினர், உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu