திருவத்திபுரம் நகராட்சியில் அதிகாரபூர்வ வேட்பாளரை வீழ்த்தி திமுக செயலாளர் வெற்றி

திருவத்திபுரம் நகராட்சியில் அதிகாரபூர்வ வேட்பாளரை வீழ்த்தி திமுக செயலாளர் வெற்றி
X

திருவத்திபுரம் நகர்மன்ற தலைவர் மோகனவேல்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு நகர திமுக செயலாளர் மோகனவேல் வெற்றி பெற்றுள்ளார்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 18 வார்டுகளை திமுகவும், ஒரு வார்டில் காங்கிரசும், 2 வார்டுகளை பாமகவும், தலா 3 வார்டுகளை சுயேச்சைகள் மற்றும் அதிமுக கைப்பற்றியது.

பெரும்பான்மையான வார்டுகளை திமுக கைப்பற்றியதால், நகர்மன்ற தலைவர் பதவிக்கு, நகர செயலாளர் மோகனவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி ஆகியோரது ஆதரவை பெற்றிருந்த விஸ்வநாதனை, நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக தலைமை முன்மொழிந்தது.

இதனால், திருவத்திபுரம் நகர்மன்ற தலைவராக விஸ்வநாதன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில், திமுக தலைமை அறிவித்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நகர செயலாளர் மோகனவேல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 16 வாக்குகளை பெற்று, நகர்மன்ற தலைவர் பதவியை மோகனவேல் கைப்பற்றி உள்ளார்.

இவர், 18-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரான விஸ்வநாதன், 11 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். திமுகவிடம் 18 கவுன்சிலர்கள் இருந்தும், 11 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. 7 பேர், மோகனவேலை ஆதரித்துள்ளது தெளிவாகிறது. மேலும் அதிமுக, பாமக மற்றும் சுயேட்சைகளும் அவரை ஆதரித்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Tags

Next Story