சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளிகள்

சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளிகள்
X

முகாமிற்கு தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி.

Disabled People -சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்தே வரும் நிலை ஏற்பட்டது.

Disabled People -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் , உதவி உபகரணங்கள் வழங்குதல் மருத்துவ உதவியாக மனநல உதவி, செவித்திறன் உள்ளிட்டவைகளுக்கு தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அரசு ஆண்கள் பள்ளி வாயிலில் இருந்து முகாம் நடத்தும் இடத்திற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர தேவையான சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததோடு போதுமான பணியாட்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் உடன் வந்தவர்களே அவர்களை தூக்கிக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு சில மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் முகாம் பகுதிக்கு தரையில் தவழ்ந்தே சிரமத்துடன் வந்தனர். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

போதுமான பணியாளர்களை நியமிக்காததால் கூட்டத்தில் சிக்கி மாற்றுத்திறனாளிகள் பலர் அவதிக்குள்ளாகினர். இனிவரும் காலங்களில் முன்னேற்பாடாக பணியாளர்களை நியமித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ முகாம் நடத்த வேண்டும், பெயரளவுக்கு முகாம் நடத்தக்கூடாது என மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அப்போது மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த செய்யாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதி அவர்களிடம் மாற்று திறனாளிகள் தங்களது தேவைகள் மற்றும் வேதனைகளை தெரிவித்தனர். உடனடியாக அவர்களின் அடிப்படை தேவைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வரும் காலங்களில் இந்த தவறுகள் நடக்கக் கூடாது என அறிவுறுத்தினார். நமது இன்ஸ்டா நியூஸ் செய்தி தளத்தில் "மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதி" என்ற தலைப்பில் கடந்த வாரம் 12 ஆம் தேதி வந்தவாசியில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யாமல் அவர்களை அவதிக்குள்ளாக்கிய மருத்துவ முகாம் பற்றி மாற்றுத்திறனாளிகளின் வேதனையை வெளியிட்டிருந்தோம்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெறும் இது போன்ற முகங்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர். வருங்காலங்களில் மாற்றுத்திறனாளிகள் முகங்கள் நடைபெறும் போது இந்த குறைகள் சரி செய்யப்படும் என அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ச்சியாக நேற்று செய்யாற்றில் நடைபெற்ற முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் , இதனை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்களும் மாற்றுத்திறனாளிகளும் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!