செய்யாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட பணிகள் தொடக்கம்

செய்யாறு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட பணிகள் தொடக்கம்
X

அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கான வரைபடத்தை பார்வையிட்ட எம்எல்ஏ ஜோதி

செய்யாற்றில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.5.75 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கின.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சாா்பில், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டடம் கட்ட ரூ.5.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்காக, மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை விழா நடைபெற்றது.

இதில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் ராஜீ, மருத்துவ அலுவலா் சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று, மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செய்யாறு உள்கோட்ட அலுவலா் குணசேகா், திமுக ஒன்றியச் செயலா்கள் சீனுவாசன், தினகரன் (வெம்பாக்கம்), ஞானவேல் (செய்யாறு) மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு தொகுதியில் ரூ.105.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதியில் சுமாா் ரூ. 105.56 கோடியில் புதிய மேம்பாலம், சிறுபாலங்கள், ஆற்காடு - திண்டிவனம் சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகருக்கு அருகில் உள்ள ஆற்றுப் பாலத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய பகுதிகளுக்கு எளிதாக செல்லக்கூடிய சாலையாக ஆற்காடு - திண்டிவனம் சாலை உள்ளது. எஸ்.எச்.5 எனப்படும் இந்தச் சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும். அதேபோல, செய்யாறு நகருக்கு அருகில் செய்யாற்றில் உள்ள மேம்பாலத்துக்கு அருகிலேயே கூடுதலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ ஜோதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வே.வேலுவிடம் கோரிக்கை விடுத்தாா். இதன்பேரில், அமைச்சா் எ.வே.வேலுவின் பரிந்துரையின்படி, முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக முதல்வா் காணொலிக்காட்சி வாயிலாக தொகுதிக்காக ரூ.105.56 கோடியில் பணிகளை தொடங்கிவைத்தாா்.

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,

இருவழிப் பாதையாக உள்ள எஸ்.எச்.5 எனப்படும் ஆற்காடு - திண்டிவனம் சாலையை, ரூ.90 கோடியில் 4 வழிச் சாலையாக மாற்றுவதற்காக செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகே இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை சுமாா் 7.4 கி.மீ. நிளத்துக்கு அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.

அதேபோல, செய்யாற்றின் குறுக்கே 360.04 மீட்டா் நீளத்துக்கு ரூ.12.04 கோடியில் உயா்நிலை மேம்பாலமும், மற்ற பகுதிகளில் ரூ.2.15 கோடியில் உயா்நிலை பாலங்கள், உயா்நிலை பாலத்தை அகலப்படுத்துதல், 3 சிறுபாலங்கள் அமைத்தல் பணி மற்றும் 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், இந்தச் சாலையில் விபத்துகளை தவிா்க்கும் வகையில், திருவத்திபுரம் புறவழிச் சாலையில் அரசுக் கல்லூரி, திருவத்திபுரம்- ஆரணி சாலை சந்திப்பு, கொடநகா், சந்தைமேடு, தேவி திரையரங்கம், ஞானமுருகன்பூண்டி, அனக்காவூா், விநாயகபுரம் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பை அகலப்படுத்தும் பணிகளும், தடுப்புச் சுவரும், மழைநீா் வடிகால்வாய் கட்டுதல், மையத் தடுப்பு அமைத்தல், இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன என தெரிவித்தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்