திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை சேதங்கள்: கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை சேதங்கள்: கலெக்டர் நேரில் ஆய்வு
X

மழையின் காரணத்தினால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் முருகேஷ்.

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மழை சேதங்களை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

வங்கக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மாண்டஸ் புயலாக கடந்த 8-ந் தேதி அதிகாலை வலுவடைந்தது. இந்த புயல் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.

இதன் காரணமாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் காற்றுடன் சில பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் கன மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் நேற்று பகலில் குளிர்ந்த காற்று வீசியது. இரவில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. ஆனால் வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

இதில் மாநிலத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில், 25 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, வானிலை ஆய்வு மைய அளவீட்டின் படி, 'ரெட் அலெர்ட்'டுக்கான அதிகன மழையாகும்.

வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் பெய்த கன மழையினால் சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. ஏரி, குளங்களில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்யாறு பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்யாறு சப்- கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் அவர் ஆய்வு மேற்கொண்டு மழை சேதம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் செய்யாறு டவுனில் மழையின் காரணத்தினால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனக்காவூர் பகுதியில் அலத்துரை பகுதியில் மழை வெள்ளத்தால் தரை பாலத்தின் மேல் அதிகளவில் தண்ணீர் செல்வதால் அதனை தாண்டியுள்ள 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்புக்கு உள்ளான பகுதியை சேர்ந்த மக்கள் கயிறு கட்டி அதனை பிடித்து பாலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதனையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மேம்பாலம் அமைத்து தரப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாண்டஸ் புயலால் தமிழகத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. செய்யாறில் 18 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மழையினால் இதுவரை 25 குடிசை வீடுகள் பகுதியாகவும், 10 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. மேலும் 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 53 மரங்கள் சரிந்துள்ளன. 174 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

மாண்டஸ் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அரசு மூலம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 25 ெசன்டி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- செய்யாறு- 181, வந்தவாசி- 87.7, ஜமுனாமரத்தூர்- 81.5, கலசபாக்கம்- 50, ஆரணி- 44.8, கீழ்பென்னாத்தூர்- 40.4, போளூர்- 25, சேத்துப்பட்டு- 24.6, திருவண்ணாமலை- 13.6, தண்டராம்பட்டு- 12.4, செங்கம்- 11.2.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், சப்-கலெக்டர் அனாமிகா, பயிற்சி கலெக்டர் ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சி) சுரேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் உள்பட தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், தோட்டக்கலைத்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!