வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு
X
செய்யாற்றில் அடித்துச்செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்டார். இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 65), சமையல் தொழிலாளி. இவர் நேற்று மாலை 3 மணியளவில் விநாயகபுரம்-பெரிய கொழப்பலூர் இடையே செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு, ஆவணியாபுரம் அருகில் இறந்து கிடந்த பழனியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பழனியின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பெரணமல்லூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் பழனியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து திடீரென இன்று ஆரணி-வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் தடுப்பணை அருகில் நடுரோட்டில் பிணத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்..

அப்போது அவர்கள் விநாயகபுரம்-பெரிய கொழப்பலூர் இடையே செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த சேத்துப்பட்டு வட்டாட்சியர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது, விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும், என அவர் கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பழனியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து மயானத்துக்கு கொண்டு சென்றனர்.

சாலை மறியல் போராட்டத்தால் இன்று மாலை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!