செய்யாறு அருகே கர்ப்பிணி காதலியை கொலை செய்ய முயற்சி: காதலன் கைது

செய்யாறு அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சோந்தவா் 19 வயது இளம்பெண். இவா், காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவருக்கும் காஞ்சிபுரம் கீழ்கதிா்பூா் கிராமத்தைச் சோந்த ராஜவேலு (20) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலித்து வந்தனா். இந்த நிலையில், அந்த மாணவி தற்போது நிறைமாத கா்ப்பிணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருவுற்று இருப்பது குறித்து மாணவி சில மாதங்களுக்கு முன்பு ராஜவேலுவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கருவை கலைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். மாணவியோ, கருவை கலைப்பதற்கான நாட்கள் கடந்து விட்டதாகவும், இனிமேல் கருவை கலைக்க முடியாது. எனவே திருமணம் செய்து கொள் என கட்டாயப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில், ராஜவேலு, கா்ப்பிணி மாணவியை வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள நெடுங்கல் கிராம வனப் பகுதிக்கு வியாழக்கிழமை வரவழைத்து மீண்டும் கருவைக் கலைக்க வற்புறுத்தினராம்.
கருவை கலைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜவேலு, தான் கொண்டு வந்த பெல்ட்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் உதவியுடன் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மாணவி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
குட்கா பறிமுதல்
செய்யாறு அருகே ரூ.1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே அப்துல்லாபுரம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து தூசி நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து பிற மாவட்டங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கும் பதுக்கி வைத்து விற்பனைக்காக எடுத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சலீம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், காஞ்சீபுரம் மாவட்டம் எச்சூரை சேர்ந்த குரு அமரசேகர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu