மணலுக்குள் சிக்கி லாரி டிரைவர் உயிரோடு சமாதியான பரிதாபம்
மணலில் சிக்கி உயிரிழந்த லாரி டிரைவர் ஞானசேகரன்
தூசி அருகே கல்குவாரியில் லாரிக்குள் துளைகளை அடைத்துக் கொண்டு இருந்தபோது 'எம் சாண்ட்' மணலை பொக்லைன் மூலம் கொட்டியதால் லாரியிலேயே டிரைவர் உயிரோடு புதைந்து சமாதியானார்.
சென்னை குன்றத்தூர் சிங்காரம் பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் ஞானசேகரன் (வயது 31). லாரி டிரைவர். நேற்று இரவு ஞானசேகரன் தனது மைத்துனர் விக்னேசுடன் (21) லாரியில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் 'எம்-சாண்ட்'லோடு ஏற்றுவதற்காக வந்தார்.
நள்ளிரவு 11.30 மணியளவில் லாரியின் உள்பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாக ரோட்டில் எம்சாண்ட் சிதறாமல் இருக்க அவற்றை அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது கல்குவாரியில் இருந்த ஆபரேட்டர் சுரேஷ்பாபு, லாரிக்குள் டிரைவர் ஞானசேகரன் இருப்பதை கவனிக்காமல் பொக்லைன் மூலம் எம்-சாண்ட் மணலை கொட்டினார்.
எம்-சாண்ட் மணல் அமுக்கியதில் அலறிய ஞானசேகரன் லாரிக்குள்ளேயே மூச்சுத்திணறி உயிரோடு சமாதியானார். பொக்லைன் ஆபரேட்டர் சுரேஷ்பாபு தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து ஞானசேகரனின் மைத்துனர் விக்னேஷ் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி பொக்லைன் ஆபரேட்டர் சுரேஷ்பாபுவை தேடி வருகின்றனர்.
இறந்த ஞானசேகரனுக்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. மனைவி ராஜேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu