செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

மாதிரி படம் 

செய்யாறு அருகே, அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா, கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர். சதீஷ், மோட்டார் சைக்கிளில் செய்யாறு நோக்கி சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், திடீரென சதீசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தங்க சங்கிலி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

சதீஷ் கொடுத்த தகவலின் பேரில், அனக்காவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர்கள் எச்சூர் கிராமத்தில் 2 நாட்களாக தங்கி இருப்பது தெரியவந்தது. வீட்டிற்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை பார்த்த சதீஷ், மர்ம நபர்களின் மோட்டார் சைக்கிள்தான் அது என்பதை உறுதி செய்தார். இதையடுத்து, அனக்காவூர் போலீசார் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், சதீஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (21), சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (20), லோகேஷ் (20), ராகுல் (21) என்பதும், அவர்கள் தங்குவதற்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் (22) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் தினக்கூலிகளாக வேலை செய்வதும், 2 நாட்களுக்கு முன்பு எச்சூரில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் வீட்டில் வந்து தங்கி நோட்டமிட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிள், 3 கத்தி, தங்க சங்கிலி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!