சேத்துப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

சேத்துப்பட்டு அருகே  வேன்  கவிழ்ந்து 16  பேர் காயம்
X
சேத்துப்பட்டு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.

வேலூரில் இருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் சேத்துப்பட்டு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.

வேலூர் அடுத்த சதுப்பேரியில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு காலை பக்தர்கள் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் செம்மாம்பாடி அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற ஒருவர் சாலையை கடந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீர் பிரேக் பிடித்துள்ளார்.

இதில் வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுதாகர், சதீஷ், அபி, சுபலட்சுமி , ரீட்டா, சுகன்யா , வெங்கடேசன், மனோகர் , ஜோதி , சூரியகலா , மணி, மற்றொரு ஜோதி , அமுதா , லித்திகா , சங்கர் , ராதா ஆகிய 16 பேர் காயமடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அமுதா, சுதாகர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு அருகே லோடு ஆட்டோ மோதி 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தேத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமு, இவர் தனது நண்பர்களான பூங்காவனம், கார்த்திகேயன் , ஞானம் , குமார் , நாகப்பன் இவர்கள் 6 பேரும் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை தேத்துறை நிழற்கூடத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் அருகே பேசிக்கொண்டிந்தனர்.

அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற லோடுஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராமு உள்ளிட்ட 6 பேர் மீது மோதியது. பின்னர் அருகில் உள்ள பைக் மீது மோதி சேதமானது. இதில் படுகாயமடைந்த 6 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கிருந்து ராமு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமு மகன் சந்தோஷ் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ தனபால் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்..

Tags

Next Story
ai automation digital future