தகுதி வாய்ந்த அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை; அமைச்சர் உறுதி

விழாவில் பேசிய அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தாழனோடை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.21 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம், ராதாபுரம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கூட்டுறவு நியாயவிலைக் கட்டடம், திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் நடராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணி துறை அமைச்சா் எ.வ.வேலு பள்ளிக் கட்டடங்கள், கூட்டுறவு நியாயவிலைக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிப் பேசியதாவது,
பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசாக திகழ்ந்து வருகிறது. காரணம் போடப்படுகின்ற அத்தனை திட்டங்களும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுகிறது.
பொது விநியோகக் கடையை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.86 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். மொத்தம் 1682 நியாயவிலைக் கடைகள் உள்ளன. நல்லவன்பாளையம் ஊராட்சி புதிய நியாயவிலைக் கடை கட்டடம் எனது தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் அதிக நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதற்காக சிலர் விஷமத்தனங்களை செய்கிறார்கள். எல்லா மகளிருக்கும் தானே ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இந்த திட்டத்தின் நோக்கமே பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கிற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் தங்கள் குடும்ப செலவிற்கு அது உதவியாக இருக்கும். பெண்களின் பொருளாதார உதவிக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தகுதியுடைய அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் நிச்சயமாக வந்து சேரும்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அப்போதைய உணவுத்துறை அமைச்சராக நான் பணியாற்றினேன். அதற்கு முன் ரேஷன் கடைகளில் சர்க்கரை, மண்ணெண்ணெய், அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
எனவே குடும்பப் பெண்களின் நலன் கருதி குடும்ப பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு துவரம்பருப்பு உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்தார் அதை தொடர்ந்து அவரது பிள்ளை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இவ்வாறு அமைச்சா் பேசினார்.
நிகழ்ச்சிகளில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu