மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்த பெண்: சொந்த ஊருக்கு வந்தது உடல்

தேன் மொழியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மற்றும் கலெக்டர்
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் தரை தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். இதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
விபத்தில் காரைக்குடியை சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில், திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் பலியானதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அவர்களுடைய விவரங்கள் குறித்து விசாரணை நடந்தது.
அதில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, மலையனூர்செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட மல்காபூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தேன்மொழி(45) என்பது உறுதியானது.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மல்காபூர் கிராமத்துக்கு நேரில் சென்று, தேன்மொழியின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். தமிழக அரசின் உத்தரவுபடி, தேன்மொழியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்படுவதாக கூறினர்.
தேன்மொழியின் உடலை மாலத்தீவில் இருந்து கொண்டு வர வேண்டும் என்று குடும்பத்தினர் தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு மாலத்தீவில் இருந்து தேன்மொழியின் உடலை விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டுவந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மல்காபூர் கிராமத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் முருகேஷ். மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் தேன்மொழியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், தேன்மொழி உடலை மாலத்தீவில் இருந்து கொண்டு வருவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அதற்கான ஆலோசனைகளை வழங்கினார். அதேபோல் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின்படி தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு பெங்களூரு வழியாக விமானத்தில் தேன்மொழியின் உடல் கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த குடும்பத்திற்கான நிதி உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம் (மேற்கு) கோ.ரமேஷ் (கிழக்கு). தண்டாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், தாசில்தார் பரிமளா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேன்மொழியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu