மீண்டும் அழகு பெறுமா சாத்தனூர் அணை?
சாத்தனூர் அணை திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.
தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இந்த அணை 1957-இல் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும், ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். ஆனால் தற்போதைய கொள்ளளவு 116 அடி தான் 3 அடிக்கு மேல் மணல் தூர்வாரப்படாமல் உள்ளது. திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது. இங்கிருந்து, பாசனத்துக்கான நீர், கால்வாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதன்மூலம் செங்கம், திருவண்ணாமலை பகுதியில் 16 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்களும் திருக்கோயிலூர் வட்டத்தில் 3 ஆயிரத்து 138 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த சாத்தனூர் அணையில் பல திரைப்படங்கள் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சரியான முறையில் விளக்குகள் எரியாததால் பல குற்றச் செயல்கள் நிகழ்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் படகு சவாரியை தொடங்க வேண்டும், அங்கு உள்ள உணவகங்களை தூய்மைப்படுத்தி சரியான விலையில் விற்கப்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றும் ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே கழிவறைகளை கட்ட வேண்டும். தற்போது மோசமான நிலையில் உள்ள கழிவறைகளை சீரமைக்க வேண்டும். அரசாங்கம் இது போன்ற சிறிய அணைகளை நன்கு பராமரித்து ஏழைகளின் உல்லாச புரியாக மாற்றி தர வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து பலமுறை அரசாங்கத்திற்கு இதுபற்றி தெரிவித்தும் சரியான முறையில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu