சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு
X

சாத்தனூர் அணை. (பைல் படம்)

சாத்தனூர் அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வருவதால் நீர்வரத்தை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 119அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கி உள்ளது. அதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 90.45 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது அணையில் தற்போது 2503 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் தற்போது மதகுகளை சீரமைத்து புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி ரூ.45 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஓராண்டு காலம் நடைபெறும் என தெரிகிறது.

எனவே அணையின் முழு கொள்ளளவு நீரை இந்தாண்டு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணையில் அதிகபட்சமாக 99 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்க முடியும். அணையின் மதகுகள் 20 அடி உயரம் கொண்டதாகும்.

அணையின் பாதுகாப்பு கருதி 95 அடி வரை நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அணைக்கு வரும் நீர்வரத்தை 24 மணிநேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!