சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
இன்று காலை பாசனத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி, சாத்தனூர் அணையின் முழு நீர் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும்.
இன்று காலை 6.00 மணி அளவில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 97.50 அடி, கொள்ளளவு 3399 மில்லியன் கன அடியாகும். தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 140 கன அடியும், வலதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 160 கன அடியும் இன்று 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் 2899 ஏக்கர், சாத்தனூர் வலதுபுறக் கால்வாயில் 4644 ஏக்கர் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு 5000 ஏக்கர் ஆகியவை சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 34கிராமங்கள், கள்ளக்குற¨ச்சி மாவட்டத்திலுள்ள 57கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 12543 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.
தற்போது, திறந்துவிடப்படும் நீரானது 04.04.2022 முதல் 15 நாட்களுக்கு கடைமடை ஏரிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் சட்ட மன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் , கூடுதல் ஆட்சித் தலைவர், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன் , மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu