கூடுதல் வகுப்பறை கட்டித் தரக்கோரி கிராம மக்கள், மாணவர்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரியமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். பள்ளியில் மாணவா்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லை. கட்டிடம் இல்லாததாலும், போதுமான இடமில்லாமலும் மாணவர்கள் பழைய கட்டிடத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள், மாணவா்களின் பெற்றோா் கூடுதல் வகுப்பறைக் கட்டம் கட்டித் தரக் கோரி, கரியமங்கலம் கிராம ஊராட்சி மற்றும் செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சில மாதங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தருவதாக கூறியிருந்தனா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா் செங்கம்-திருவண்ணாமலை சாலையில் கரியமங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் டிஎஸ்பி சின்ராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 'சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து கட்டடம் கட்டித் தர உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்,' என பொதுமக்கள் தெரிவித்தனா். இதனிடையே, அவ்வழியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த வாகனம் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனா்.
அதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் அங்கு வந்து பள்ளிக்கு உடனடியாக கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
மறியல் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu