10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
10 வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம், பலவக்கல், ராமாபுரம், கீழ்பாச்சல் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு அரசு குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று, இப்பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பல முறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்துள்ளனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகக் கூறும் மக்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உச்சிமலை குப்பம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் குடியிருந்து வரும் பகுதியை ஜல்லி மெஷின் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமித்து, தங்களுக்கு பாதை கூட விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலின் போது அரசு வழங்கிய குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவற்றினை காவல்துறையினரிடம் காண்பித்து, இதையெல்லாம் வழங்கிய அரசு எங்களுக்கு ஏன் பட்டா வழங்கக்கூடாது என கேட்டனர். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும், போலீசார் அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியலை கைவிட்டனர்.
கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu