செங்கம் பகுதியில் சாலையில் மருந்து, இறைச்சி காய்கறி கழிவுகள் வீச்சு

செங்கம் பகுதியில் சாலையில் மருந்து, இறைச்சி காய்கறி கழிவுகள் வீச்சு
X

செங்கம் பஸ் நிலையம் அருகே கிடந்தத  ஊசி, மருந்து, மாத்திரைகள் 

செங்கம் பகுதியில் சாலையில் இறைச்சி காய்கறி கழிவுகள் ஊசி மருந்து மாத்திரைகள் வீசப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் பல்வேறு காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்யும் கடைகள் நடமாடும் ஆட்டோக்களில் காய்கறி விற்பனை மற்றும் நடமாடும் பழக்கடைகள் அதிக அளவில் செயல்படுகிறது.

செங்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் செங்கத்திற்கு வந்து வாங்கி செல்வர்.

செங்கம்- போளூர் தேசிய நெடுஞ்சாலையில் மில்லத் நகரில் தொடங்கி குயிலம் கூட்ரோடு, நீதிமன்றம் செல்லும் ரோடு, போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் கெட்டுப்போன காய்கறிகள், பழ வகைகளை சாலையின் 2 பக்கமும் வியாபாரிகள் கொட்டி விட்டு செல்கின்றனர்.

அதேபோல மக்கிய நிலையில் குப்பைகள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் சாலை ஒரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலை இருபக்கத்திலும் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக மழை நேரங்களில் துர்நாற்றம் அதிக அளவு வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

குப்பைகள், கெட்டுப்போன காய்கறிகள் பழ வகைகள், இறைச்சி கழிவுகள் சாலையின் இரு புறங்களிலும் கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை சாலையின் ஒரங்களில் வீசி செல்வோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் எனவு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேட்பாரற்று கிடந்த மருந்து, மாத்திரைகள்

செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறும் இடத்தின் அருகே இந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.

இங்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் மாத்திரைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவைகள் கேட்பாரற்று கிடந்தது.

மேலும் பால்வாடி அருகில் அமைந்துள்ள பழைய குடிநீர் தொட்டி கீழே மாத்திரை, மருந்துகள், ஊசிகள் கொட்டி கிடந்தது. அங்கு இருந்த இரும்புஷெட் ஒன்றில் அட்டைப் பெட்டிகளில் ஏராளமான மாத்திரைகளும், ஊசிகளும் இருந்தது. அரசு வழங்குவது விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் மருந்து அட்டைகளின் மேல் அச்சிடப்பட்டிருந்தது.

இதனை சிறுவர்கள் அல்லது மாத்திரையின் தன்மை தெரியாமல் யாரும் பயன்படுத்தி விபரீதம் ஏற்படும் முன் மருந்து மாத்திரைகளை பொதுவெளியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் போட்டு சென்ற நபர்கள் மீதும், சம்பந்தப்பட்ட துணை அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மருந்து மாத்திரைகளில் பெரும்பாலும் காலாவதி ஆகும் தேதி 2024-ம் ஆண்டு வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai tools for education