வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை, அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாணாபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்டராம்பட்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளா கலையரசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், முதல் பெண் பிள்ளைகளின் பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏதுவாகவும் அவர்கள் சிரமமின்றி எதிர்காலத்தில் படிப்பை தொடர்வதற்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் தொடர அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
ஒரு மாவட்ட நிர்வாகம் என்பது மாவட்ட கலெக்டரின் கீழ் நடைபெறுகிறது.
மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளர் இருப்பார் அல்லது இயக்குனர்கள் இருப்பார்கள். ஆனால் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில்தான் ஒட்டுமொத்த துறையும் இயங்குகிறது. ஒரு பொருத்தமான மாவட்ட ஆட்சித் தலைவர் அமைந்தால்தான் அந்த மாவட்டம் வளர்ச்சி அடையும்.
அமைச்சராக இருந்து நான் ஆணையிட்டாலும் எனக்கு கீழே இருக்கிற துறையின் செயலாளரும் அதை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினால் மட்டுமே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் போய் சேரும். அப்படி போய் சேர வேண்டும் என்றால் அரசுக்கும் பயனாளிக்கும் பாலமாக இருந்து செயலாற்றுவது மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தான். பல்வேறு துறையின் சார்பாக ஆணைகளை போடுவோம். ஆனால் அது மக்களை போய் சேராது. அந்த திட்டங்கள் மக்களை போய் சேர மாவட்ட நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் திட்டங்கள் போய் சேராது.
இன்று பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகவும். மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டருக்கு அடுத்த நிலையில், பெண்களாகவே அதிகம் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார், அண்ணா கருணாநிதி தான் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ரூபாய் 134.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 752 பயனாளிகளுக்கு ரூபாய் 889.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பார்வதி சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், கூட்டுறவு இணை பதிவாளர் நடராஜன், திட்ட இயக்குனர் (மகளிர்), சையதுசுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu