கர்நாடகா பஸ் மோதி இருவர் உயிரிழப்பு; பஸ் மீது கல் வீச்சு

விபத்து ஏற்படுத்திய கர்நாடகா அரசு பேருந்து
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரசாந்த்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பஸ் நள்ளிரவு 1.30 மணி அளவில் செங்கம் அருகே வந்தபோது ஆம்னி பஸ் டயர் பஞ்சர் ஆனது. இதனால் ஆம்னி பஸ் டிரைவர் திருச்சியை சேர்ந்த அன்பு என்பவர் பஞ்சர் ஒட்டுவதற்காக ஆம்னி பஸ்சை பிரசாந்த்தின் கடையின் முன் நிறுத்தியுள்ளார்.
அப்போது பஞ்சர் கடை உரிமையாளர் சிவாவின் மகன் பிரசாந்த் பஞ்சர் ஒட்டுவதற்காக அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஆம்னி பஸ் டிரைவர் அன்பு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா அரசு பஸ் திடீரென தறி கெட்டு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியது. பிரசாந்தும், அன்பும் தூக்கி எறியப்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் கர்நாடகா அரசு பஸ்ஸில் வந்த டிரைவர் மற்றும் கண்டக்டரும் பஸ்ஸிலிருந்து குதித்து தப்பி நள்ளிரவில் ஓடிவிட்டனர். கர்நாடகா பஸ்ஸில் வந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பிரசாந்தின் உறவினர்கள் பிரசாந்தின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
அங்கு திரண்ட கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய கர்நாடகா அரசு பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்னி மற்றும் கர்நாடகா பஸ்ஸில் வந்தவர்களை மாற்று வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பிறகு விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கர்நாடகா அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர். கர்நாடகா அரசு பஸ் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu